சர்வீஸ் சாலை அமைக்காத தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்
ஓசூர்: ஓசூர் அருகே, சர்வீஸ் சாலை அமைத்து தராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கர்நாடகா மற்றும் தமிழக எல்லையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து, தமிழக எல்லையான ஓசூர் வழியாக சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு அமைக்கப்படுகிறது. தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட சாத்தனுார் வழியாக, 25 கிராமங்களை கடந்து, 45 கி.மீ., துாரத்திற்கு இச்சாலை தமிழகத்தில் செல்கிறது. இதற்காக மொத்தம், 303 ஹெக்டேர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தை விட, தமிழகத்தில் குறைந்த விலைக்கு நிலங்களை கையகப்படுத்துவதாக, விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், ஓசூர் அருகே மல்லசந்திரம், அலசப்பள்ளி, பட்டவாரப்பள்ளி ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களை கையகப்படுத்திய போது, சர்வீஸ் சாலை அமைத்து தரப்படும் என, தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் நில எடுப்பு அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தனர்.இப்பகுதிகளில், 90 சதவீதம் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், தற்போது வரை சர்வீஸ் சாலை அமைத்து தரவில்லை. இதனால், சாலை பணியை மேற்கொள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், தங்களை ஏமாற்றி விட்டதாக கூறி பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பவாநந்தினி மற்றும் தனி தாசில்தார் மகேஸ்வரி ஆகியோரை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.