உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிரைவரை கொலை செய்து வாகனம் திருடிய இருவர் கைது

டிரைவரை கொலை செய்து வாகனம் திருடிய இருவர் கைது

கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், பாலகோட்டில் இருந்து டாடா ஏஸ் வாகனத்தை வாடகைக்கு எடுத்துச் சென்று, வேப்பனப்பள்ளி அருகே டிரைவரை கொலை செய்து விட்டு, வாகனத்தை திருடி சென்ற இருவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும் இருவரை, போலீஸார் தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பாலகோட்டை சேர்ந்தவர் அருண்குமார்(28). அவருக்கு சொந்தமான டாடா ஏஸ் சரக்கு வாகனத்தை வாடகைக்கு ஓட்டி வந்தார். 2008 டிசம்பர் 12ம் தேதி மாலை, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் இருந்து வீட்டு சாமான்களை ஏற்றி வரவேண்டும் என்று கூறி, மூன்று பேர் பாலக்கோட்டில் இருந்து வாகனத்தை வாடகைக்கு எடுத்தனர். வேப்பனப்பள்ளி அடுத்த பெரியசூலாமலை அருகே வந்த போது, வாகனத்தை நிறுத்திய அந்த கும்பல் அருண்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்து, அருகில் உள்ள விவசாய நிலத்தில் வீசி விட்டு, டாடா ஏஸ் வாகனத்தை கடத்தி சென்றுள்ளனர்.இது குறித்து வி. மாதேப்பள்ளி வி.ஏ.ஓ., பவுன் வேப்பனப்பள்ளி போலீஸில் புகார் செய்தார். கொலையாளிகளை பிடிக்க, எஸ்.பி., கண்ணன் மேற்பார்வையில் குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் சையத்பாபு மற்றும் எஸ்.ஐ., பூங்காவனம், ஏட்டுகள் வெங்கடாசலம், ராஜா, மல்லேஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் பல்வேறு இடங்களில் கொலையாளிகளை தேடி வந்தனர். நேற்று முன்தினம் குந்தாரப்பள்ளி கூட்ரோடு அருகே, தனிப்படை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், அவர் திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் தாலுகா நடுஇருகாலூர் கிராமத்தை சேர்ந்த பிரபு(31) என்பதும், இவர் அருண்குமார் கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது அவரை போலீஸார் கைது செய்தனர். பிரபு அளித்த தகவலின் பேரில், வழக்கில் தொடர்புடைய சேலம் பெரியபுதூரை சேர்ந்த சரவணன்(35) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை, தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீஸாரிடம் பிடிப்பட்ட கும்பல் உடுமலை பேட்டை, திருச்செங்கோடு உள்ளிட்ட பல பகுதிகளில் வாகனங்களை கடத்தி டிரைவரை கொலை செய்து விட்டு, அதை விற்பனை செய்த வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை