பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் தேர்தல்
ஓசூர்,: கிருஷ்ணகிரி, பா.ஜ., மேற்கு மாவட்டத்தில், ஓசூர், தளி, வேப்பனஹள்ளி ஆகிய, 3 சட்டசபை தொகுதிகள் வருகின்றன.இதை உள்ளடக்கிய கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் பதவிக்கான உட்கட்சி தேர்தல், ஓசூரிலுள்ள, பா.ஜ., கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. தற்போதைய மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் நாகராஜூ, சீனிவாசரெட்டி, ராமகிருஷ்ணன், சகுந்தலா, சந்திரசேகர் உட்பட மொத்தம், 14 பேர், மேற்கு மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். ஒன்றிய தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள் என மொத்தம், 56 பேர் ஓட்டளிக்க தகுதியானவர்கள் என முடிவு செய்து, அவர்கள் மட்டும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப் பட்டனர்.தேர்தல் அதிகாரியாக சாட்சியாதிபதி செயல்பட்டார். மேற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் முனவரி பேகம், கிருஷ்ணகிரி பார்லிமென்ட் தொகுதி தேர்தல் பார்வையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், 56 பேர் தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.இதன் முடிவுகள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட்டு, தலைவர் முறைப்படி அறிவிக்கப்படுவார் என, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.