கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு8,000 ஏக்கர் பாசன வசதி பெறும்
ஓசூர்:ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து, 2ம் போக பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் வலது பாசன கால்வாய் மூலம், 2,082 ஏக்கரும், இடது கால்வாய் மூலம், 5,918 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. இந்தாண்டு, 2ம் போக விவசாய பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் இடது கால்வாயில், 62 கன அடி, வலது கால்வாயில், 26 கன அடி நீர் என, பாசனத்திற்கு திறந்து விட்டனர். இதன் மூலம் ஓசூர், சூளகிரி தாலுகாவிலுள்ள மொத்தம், 22 கிராமங்களில், 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.அணை நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொருத்து, முதல், 5 நாட்களுக்கு தண்ணீர் திறந்தும், அடுத்த, 5 நாட்களுக்கு நிறுத்தியும் சுழற்சி முறையில் வரும் மே, 26 வரை, 90 நாட்களுக்கு, 6 நனைப்புகளுக்கு நீர் வழங்கப்படும் என, நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. கெலவரப்பள்ளி அணை மொத்த உயரமான, 44.28 அடியில், நேற்று, 40.67 அடிக்கு நீர் இருப்பும், வினாடிக்கு, 222 கன அடி நீர்வரத்தும் இருந்தது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கேட்டுக்கொண்டார். அப்போது விவசாயிகள், வலது, இடது கால்வாய்களை சீரமைக்க வேண்டும், கடைமடை வரை தண்ணீர் கிடைப்பதில்லை என புகார் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார். ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மோகன்ராஜ், உதவி பொறியாளர்கள் சிவசங்கர், அஜெய்ஷா, தாசில்தார் சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.