கிருஷ்ணகிரி: கோடை விடுமுறை முடிந்து, தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முதல் நாளான நேற்று மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளில் நடப்பாண்டில் முதல் நாளில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மலர், இனிப்பு கொடுத்தும் சிறப்பு பிரார்த்தனை நடத்தியும் மாணவர்களை வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் அனுப்பினர். பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்களும் வழங்கப்பட்டன.கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகங்களை கலெக்டர் சரயு வழங்கி பேசுகையில், ''ஆண்டுதோறும் மாணவர்களை விட மாணவியரின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளதால், அவர்களுக்கு இணையாக மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து வந்த மாணவியருக்கு, நகராட்சி தலைவர் பரிதாநவாப், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் ஆகியோர் மலர்கள் மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சிகளில், மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி, தலைமையாசிரியர் மகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் திருமலைராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், முதல் நாள் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், தலைமை ஆசிரியர் சிவராமன், உதவி தலைமை ஆசிரியர்கள் வெங்கடேசன், தர்மன், ஆசிரியர்கள் அருண் பிரசாத், கலைவாணி, அருள் பிரியா, ரஞ்சித், சிங்காரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.