ஓசூர்: ஓசூரில், 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விதை சுத்திகரிப்புடன் கூடிய சேமிப்பு கிடங்கு கட்ட, பூமி பூஜை நேற்று நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள ராயக்கோட்டை சாலையில், வேளாண் அலுவலகம் உள்ளது. இங்கு, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம், 53 லட்சம் ரூபாய் மதிப்பில், 100 டன் அளவிலான விதை சுத்திகரிப்புடன் கூடிய சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது. இப்பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தனர். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன், உதவி இயக்குனர் புவனேஸ்வரி, வேளாண் அலுவலர் ரேணுகா, துணை வேளாண் அலுவலர் முருகேசன், உதவி விதை அலுவலர் செல்லய்யா உட்பட பலர் பங்கேற்றனர்.இது குறித்து, வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஓசூர், தளி, கெலமங்கலம், சூளகிரி வட்டாரத்தில், விதை பண்ணை அமைக்கும் விவசாயிகளிடம் இருந்து, அரசு விதைகளை நேரடியாக கொள்முதல் செய்யும். அப்போது, விதையுடன் கலந்திருக்கும் கல், மண் மற்றும் துாசிகளை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின் அவற்றை சேமித்து வைத்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவோம். அதனால், 100 டன் அளவிலான, சேமிப்பு கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது' என்றனர்.