ஓசூர்:அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் மங்கள்ரவிதாஸ், 25, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி ராஜிவ்காந்தி நகரிலுள்ள கீதாம்மா, 54, என்பவருக்கு சொந்தமான கட்டட அறையில் வாடகைக்கு தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு போன் செய்த, பேகேப்பள்ளியை சேர்ந்த, 'மேன் பவர்' ஏஜன்சி நடத்தும் சபரி சிங், 35, என்பவர், 'ஆறு பேர் இன்று ஒரு நாள் மட்டும், உன் அறையில் தங்க அனுமதிக்க வேண்டும்' என கேட்டார்.அதன்படி, மங்கள்ரவிதாஸ் அறையில் அந்த ஆறு பேரும் இரவு தங்கினர். போதிய இடவசதி இல்லாததால், அருகிலிருந்த நண்பரது அறையில் மங்கள்ரவிதாஸ் துாங்கினார். அவரது அறையில் தங்கிய ஆறு பேரும், இரவில் மது குடித்தனர். நேற்று காலை மங்கள்ரவிதாஸ், தன் அறைக்கு சென்று கதவை தட்டியபோது திறக்கவில்லை.சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியே பார்த்தபோது, தலை பின்பகுதியில் வெட்டு காயங்களுடன், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடன் வந்த மற்ற, ஐந்து பேரை காணவில்லை. மங்கள்ரவிதாஸ், சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார், மங்கல்ரவிதாசுக்கு போன் செய்த சபரிசிங்கை விசாரித்தனர். அவர், கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளியை சேர்ந்த சேகர் என்பவர், ஆறு பேரையும், இரவில் தங்க வைக்க கேட்டதால், மங்கள்ரவிதாஸ் அறையில் தங்க வைத்ததாக தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.இதற்கிடையே, கொலையான வாலிபர், ஓசூர் அருகே சூடசந்திரத்தை சேர்ந்த உமேஷ், 21, என்பதும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரிந்தது.அவரை கொலை செய்யும் நோக்கில் அழைத்து வந்து பழி தீர்த்துள்ளனரா அல்லது மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்தில், சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.