| ADDED : மே 04, 2024 09:46 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பில், தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை, கலெக்டர் சரயு நேற்று ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய நான்கு வட்டாரங்களில், 89 தனியார் பள்ளிகளை சேர்ந்த, 490 பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதில் கிருஷ்ணகிரி, பர்கூர் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த, 52 தனியார் பள்ளிகளின், 315 பள்ளி பஸ்கள், வாகன விதிகள் படி முறையாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, அவசர வழி, வேக கட்டுப்பாடு மற்றும் வாகன ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவசர காலங்கள் அல்லது அசாதாரண சூழ்நிலைகளில் மாணவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ள அவசரகால பொத்தான் பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.தொடர்ந்து கலெக்டர், தீயணைப்பு துறையினர் மூலம் தீ விபத்தின் போது டிரைவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டதையும், 108 ஆம்புலன்ஸ் குழுவினர் விபத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்த செய்முறை விளக்கம் செய்து, டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை பார்வையிட்டார்.ஆய்வின் போது கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு, கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.