கிருஷ்ணகிரி: விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய, வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பயிரின் வளர்ச்சி என்பது, அதன் மண் வளத்தை பொறுத்தே அமைகிறது. மண் வளம் பேணவும், மண் வளத்தை மேம்படுத்தவும், பராமரிக்கவும், மண் பரிசோதனை மிகவும் அவசியமாகும். காலநிலை மாற்றம், பருவம் தவறிய மழை, அதிகப்படியான ரசாயன உரங்களின் பயன்பாடு, நிலத்தடி நீர் வற்றி போகுதல் போன்ற காரணங்களால், மண் வளம் நாளுக்கு நாள் குன்றி வருகிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, உணவு தேவையை சமாளிக்க, பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க, மண் வளத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. மண் பரிசோதனை செய்து, பரிந்துரைக்கப்பட்ட கனிம உரங்களையும், இயற்கை எருக்களையும் அதிகமாக உபயோகிக்க வேண்டும். இதன் மூலம், மண்ணில் உள்ள பேரூட்ட சத்துக்களின் அளவுகளை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப ரசாயன உரங்களை, சரியான அளவில் இடவேண்டும். இதனால், உரச்செலவை குறைக்க முடியும். நீர் மாதிரி மற்றும் மண் மாதிரி ஒன்றுக்கு ஆய்வு கட்டணம், 30 ரூபாய். இனி வரும் காலங்களில், விவசாயிகள் அனைவரும், மண் பரிசோதனை செய்து, மண் வள அட்டை வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.