கிப்ட் திலேப்பியா மீன் வளர்ப்பு குறித்து 30 பயனாளிகளுக்கு 14 நாட்கள் பயிற்சி
கிருஷ்ணகிரி, கிப்ட் திலேப்பியா மீன் வளர்ப்பு குறித்து, 30 பயனாளிகளுக்கு, 14 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது.தமிழக அரசின், நான் முதல்வன் வெற்றி நிச்சயம் என்ற திட்டத்தில், மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ளோருக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை மாநிலம் முழுவதும் வழங்கி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் புங்கம்பட்டி தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை கழகத்தின், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்ககத்தில், கிப்ட் திலேப்பியா மீன்வளர்ப்பு குறித்து கடந்த மாதம், 26 முதல், 14 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியை இம்மாவட்டத்தை சேர்ந்த, 30 பயனாளிகளுக்கு வழங்கியது.பாரூர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மைய உதவி பேராசிரியர் சோமு சுந்தரலிங்கம், பண்ணை மேலாளர் தமிழ்காவியா மற்றும் அவரது குழுவினர் பயிற்சி அளித்தனர். குளம் அமைத்தல், குளம் பராமரிப்பு, திலேப்பியா மீன் வளர்ப்பு, தீவன தயாரிப்பு மற்றும் மேலாண்மை, மீன் வளர்ப்பில் அரசின் நிதி உதவி திட்டங்கள் மற்றும் பல்வேறு செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், பயனாளிகள் ஒரு நாள் கள அனுபவத்திற்காக பெண்ணேஸ்வரமடத்தில் உள்ள தருண் மீன் குஞ்சு பண்ணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.