டிராக்டர் டிரைவர் கொலையில் 3 பேருக்கு இரட்டை ஆயுள்
ஓசூர், அஞ்செட்டி அருகே நடந்த டிராக்டர் டிரைவர் கொலையில், 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, ஓசூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே, ராணிப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 35. டிராக்டர் டிரைவர். இவருக்கும், ஒகேனக்கல் அருகே நாட்டார்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த டிரைவர் தங்கவேலு, 44, என்பவருக்கும் மணல் அள்ளுவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது-. முருகனை தீர்த்து கட்ட, தங்கவேலு முடிவு செய்தார். ஒகேனக்கல் அருகே ஊட்டமலையை சேர்ந்த கோவிந்தன், 59, என்பவர் மூலம், 2013 ஜன., 12 மதியம், 3:00 மணிக்கு, முருகனை பைக்கில் கடத்தினார். அஞ்செட்டி அடுத்த பூமரத்துகுழி வனத்துறை சோதனைச்சாவடி அருகே அன்று மாலை, 6:30 மணிக்கு, பைக்கை வழிமறித்த தங்கவேலு தரப்பினர், முருகனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து, சடலத்தை அருகே வனத்தில் வீசினர். அஞ்செட்டி போலீசார், தங்கவேலு, அவர் மனைவி உஷா, 32, நாட்டார்கொட்டாய் வேலுமணி, 34, கோவிந்தன், சதீஷ் என மொத்தம், 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு, ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சந்தோஷ், குற்றம் சாட்டப்பட்ட தங்கவேலு, வேலுமணி, கோவிந்தன் ஆகிய, 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தலா, 3,000 ரூபாய் அபராதம், கட்ட தவறினால் மேலும், 3 மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். தங்கவேலு மனைவி உஷாவை விடுதலை செய்தார். ஆரம்பத்தில் இருந்தே சதீஷ் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவானார். அதனால், அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. அரசு தரப்பில் வக்கீல் சின்னபில்லப்பா ஆஜராகினார்.