உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி தாய், மகள் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படை

கிருஷ்ணகிரி தாய், மகள் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படை

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே தாய், மகள் கொலை வழக்கில், குற்றவாளிகளை பிடிக்க ஏழு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரியை அடுத்த பாஞ்சாலியூர், யாசின் நகரை சேர்ந்த சுரேஷ் மனைவி எல்லம்மாள், 50; கணவர் இறந்த நிலையில் அவர் செய்து வந்த பைனான்ஸ் தொழிலை செய்து வந்தார். இவரின் மகள் சுசிதா. ஏழாம் வகுப்பு மாணவி. இருவரும் நேற்று முன்தினம் மாலை, வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இரட்டைக் கொலை அப்பகுதியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகளை பிடிக்க ஏழு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீசார் கூறியதாவது: ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், கொலை நடந்துள்ளது. கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கிறோம். கொலையான சமயத்தில், அவரை தொடர்பு கொண்டவர்களின் மொபைல் டவர் லொகேஷன் மற்றும் 'சிசிடிவி' கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றை விசாரிக்க, ஏ.டி.எஸ்.பி., சங்கர் தலைமையில் ஏழு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர். போலீசாரை கண்டித்து சடலங்களுடன் மறியல்கொலை நடந்து, 24 மணி நேரமாகியும் குற்றவாளிகளை பிடிக்காத போலீசாரை கண்டித்து, கொலையுண்டவர்களின் உறவினர்கள் நேற்று மாலை, 5:40 மணியளவில் ஆர்.பூசாரிப்பட்டி, நான்கு ரோடு அருகே இருவரது சடலங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி மாணவி உட்பட இருவர் பட்டப்பகலில் கொல்லப்பட்டுள்ளனர். இங்குள்ள இரு டாஸ்மாக் கடைக்கு தினமும் வரும், 500க்கும் மேற்பட்டோர் சாலையோரம் பாட்டில்களை வீசியும், சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். மக்களுக்கு போலீசார் தக்க பாதுகாப்பு வழங்குவதில்லை. குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். ஏ.டி.எஸ்.பி., சங்கர், டி.எஸ்.பி., முரளி, இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், குலசேகரன் மற்றும் போலீசார், விரைவில் குற்றவாளியை பிடித்து விடுவோம் என உறுதியளிக்கவே கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை