டவுன் பஞ்., கூட்டத்தில் பா.ஜ., கவுன்சிலர் வெளிநடப்பு; கணவருடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
ஓசூர்: தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த, பா.ஜ., கவுன்சிலர், தன் கணவருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., சாதாரண கூட்டம், தலைவர் சீனிவாசன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் அப்துல்கலாம், செயல் அலுவலர் மஞ்சுநாத் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், டவுன் பஞ்., பொது நிதியில் இருந்து, 1 கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சி பணிகளை செய்ய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் 13 வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் சஞ்சனா, ''என் வார்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் பொது நிதியில் இருந்து, 3.40 லட்சம் ரூபாய் அளவிற்கு மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 15 வது நிதிக்குழு திட்டத்தில், 21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, என் வார்டிலும், 2 வது வார்டிலும் சாலை பணிகள் மேற்கொள்ள இருப்பதாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பணிகள் துவங்கவில்லை.''பொது நிதியில் மேற்கொள்ளப்படும் பணியில், என் வார்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. என் வார்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்,'' என்றார்.ஆனால், பொது நிதியில் அவரது வார்டை சேர்க்காததால், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர் சஞ்சனா, தன் கணவர் பாலாஜியுடன் சேர்ந்து, டவுன் பஞ்., அலுவலகம் முன் உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தை நடத்திய செயல் அலுவலர் மஞ்சுநாத், பணிகள் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், கவுன்சிலர் சஞ்சனா போராட்டத்தை கைவிட்டார்.