ஓசூர்: ஓசூரில், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த டிரைவரின் உடல் உறுப்புகளை, அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானசந்திரம் காந்தி நகரை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் முனீந்திரன், 31, கம்ப்ரசர் வாகன டிரைவர்; கடந்த, 1 மதியம், 3:00 மணிக்கு, கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பத்தலப்பள்ளி மார்க்கெட் அருகே புல்லட்டில் சென்றார். அப்போது பின்னால் வந்த டி.வி.எஸ்., அப்பாச்சி பைக் மோதியது. ஹெல்மெட் போடாத முனீந்திரன், கீழே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்தார்.அவரை, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, நேற்று காலை மூளைச்சாவு அடைந்தார். அதனால் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர்.அதன்படி, முனீந்திரனின் கண்கள், கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, ஓசூருக்கு முனீந்திரன் சடலம் கொண்டு வரப்பட்டது. ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா தலைமையில், வருவாய்த்துறையினர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஏற்பாடுகளை செய்தனர். உயிரிழந்த முனீந்திரனுக்கு, ஜோதி, 25, என்ற மனைவியும், 6 வயது மகள், 4 வயது மகன் உள்ளனர்.