சம்மந்தி மறைவால் முதல்வரின் கிருஷ்ணகிரி நிகழ்ச்சி ஒத்திவைப்பு
ஓசூர்,: தமிழக முதல்வர் ஸ்டாலினின்மருமகன், தந்தை மறைவால், கிருஷ்ணகிரியில் இன்று நடக்கவிருந்த அரசு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.தமிழக முதல்வர் ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, செப்., 11, 12ல் இரு நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி, 80, நேற்று முன்தினம் நள்ளிரவு காலமானார். அதனால் முதல்வர் பயணம் ரத்து செய்யப்படும் என, முதலில் தகவல் வெளியானது. ஆனால் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்பார் என, காலையில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது.அதன்படி, சென்னையிலிருந்து தனி விமானம் மூலம், ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளியில் உள்ள, தால் நிறுவனத்திற்கு வந்த முதல்வர், சாலை மார்க்கமாக காரில், ஓசூர் - தளி சாலையில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்திற்கு காலை, 11:20 மணிக்கு வந்தார். அங்கு, 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன் பின், ஓசூர் - பாகலுார் சாலையில், எல்காட் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில், அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார்.ஓசூர் நகர் பகுதி மற்றும் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு இடங்களில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சபரீசனின் தந்தை உடல் இன்று அடக்கம் செய்யப்பட இருப்பதால், கிருஷ்ணகிரி டோல்கேட்டில் நேற்று மாலை, 6:00 மணிக்கு நடக்க இருந்த ரோட்ஷோ மற்றும் இன்று கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கவிருந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதனால், நேற்று மாலை குருபரப்பள்ளி டெல்டா நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அங்கிருந்து புறப்பட்டு, ஓசூர் பேலகொண்டப்பள்ளிக்கு வந்தார். பின் அங்கிருந்து, விமானம் மூலமாக, மாலை, 5:00 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்னை புறப்பட்டு சென்றார். அடுத்த வாரத்தில் முதல்வர், கிருஷ்ணகிரி வர இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.