உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் இரு தரப்பினர் இடையே மோதல்:சப்-கலெக்டர் ஆபீசை வி.சி., முற்றுகை

ஓசூரில் இரு தரப்பினர் இடையே மோதல்:சப்-கலெக்டர் ஆபீசை வி.சி., முற்றுகை

ஓசூர்:பீர்ஜேப்பள்ளியில், இருதரப்பினர் மோதல் தொடர்பாக, ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தை வி.சி., கட்சியினர் முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளியில், விநாயகர் சதுர்த்தியின்போது, ஊர் மக்கள் தரப்பில், 5 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மற்‍றொரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் ஒரு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, விநாயகர் சிலையை கரைக்க ஊர்வலமாக சென்றபோது, மாலை, 5:00 மணிக்கு ஊரிலுள்ள விநாயகர் கோவில் முன், சிலையை நிறுத்தி பூஜை செய்ய முயன்றனர். அதற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், விநாயகர் சிலையை உடைத்ததால், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில், ஊர்மக்கள் தரப்பில், 3 பேர் உட்பட இரு தரப்பிலும் மொத்தம், 9 பேர் காயமடைந்தனர். இதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட தரப்பினர் கொடுக்கும் புகார் மீது வழக்குப்பதிந்து, தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்யக்கோரியும், நேற்று காலை, 11:30 மணியளவில், வி.சி., கட்சியினர், ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலிருந்து, சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். கட்சியின் ஓசூர் மாநகர மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், பார்லிமென்ட் தொகுதி செயலாளர் செந்தமிழ் ஆகியோர் தலைமையில், சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், கைது நடவடிக்கை எடுக்கா விட்டால், அடுத்த, 15 நாட்களில் திருமாவளவனை அழைத்து வந்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். அவர்களிடம், இன்ஸ்பெக்டர்கள் ஹட்கோ -- சுப்பிரமணியம், சிப்காட் - முத்தமிழ் செல்வராசு ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், போராட்டம் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை