கிருஷ்ணகிரி, ''எண்ணேகொள் கால்வாய் திட்டத்தில், நில எடுப்பு பணிகள் துரிதப்பட்டுத்தப்பட்டு, புதிய வழங்கு கால்வாய்கள் வெட்டும் பணி வேகமாக நடக்கிறது,'' என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் எண்ணேகொள் தடுப்பணையில் இருந்து, 0 பாய்ன்ட், 400 மீட்டர் பாய்ன்ட் பகுதிகளில், நீர்வளத்துறை சார்பில், போலுப்பள்ளியில் இடதுபுற புதிய வழங்கு கால்வாய் அமைக்கும் பணிகளை, கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளக்காலங்களில் வரும் உபரிநீரை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்திலுள்ள வறட்சியான பகுதிகளுக்கு நீர் வழங்கும் வகையில் எண்ணேகொள் கால்வாய் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதில், பிரதான கால்வாய்கள், கிளை கால்வாய்கள் அமைக்கும் பணிகள், 233.34 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கிறது. இத்திட்டத்தில், எண்ணேகொள் தடுப்பணையின் வலதுபுறத்தில், 50.65 கி.மீ., தொலைவிற்கு கால்வாயும், 5.51 கி.மீ., கிளைக்கால்வாயும் வெட்டப்பட உள்ளது. அதேபோல், இடதுபுறத்தில், 22.675 கி.மீ.,தொலைவிற்கு பிரதான கால்வாயும், 2.40 கி.மீ., கிளைக்கால்வாய் வெட்டும் பணிகள் மற்றும் தொட்டி பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.இத்திட்டத்திற்கு தனியார் பட்டா நிலம், 150.17 ஹெக்டேர், புறம்போக்கு நிலங்கள், 38.99 ஹெக்டேர் மற்றும் வனநிலம், 13.56 ஹெக்டேர் நிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பட்டா நிலங்களில் நில எடுப்பு பணிகள் படிப்படியாக முடிக்கப்பட்டு, புதிய கால்வாய்கள் வெட்டும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் சையது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.