தொடர்கிறது ஏ.டி.எம்., கொள்ளை எஸ்.பி.ஐ.,யில் ரூ.23 லட்சம் போச்சு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 12 லட்சம் ரூபாய் நிரப்பப்பட்டுள்ளது. இரவு ஏ.டி.எம்.,மிற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த, 'சிசிடிவி' கேமராவில் கருப்பு ஸ்பிரே அடித்து, காஸ் வெல்டிங்கால் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளைஅடித்து சென்றுள்ளனர். நேற்று காலை மகாராஜகடை போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். ஏ.டி.எம்., இயந்திரத்தில், ஏற்கனவே பணம் இருந்ததால் மொத்தம், 23 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.மாவட்டத்தில் ஆறு மாதங்களில், 'சிசிடிவி'யில் கருப்பு ஸ்பிரே அடித்து, காஸ் கட்டிங் செய்து கொள்ளை முயற்சி மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த ஏப்., 6ல் கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளியில், ஓசூர் தேசிய நெடுஞ்சாலையோர எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., உடைக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் கொள்ளை போனது. ஜூலை 5ல், ஆவலப்பள்ளி ஹட்கோ அருகே ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்க முயன்ற போது, காவலாளி வந்ததால் கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்தனர்.ஜூலை 6ல், ஓசூர், பாகலுார் சாலை ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, 14.50 லட்சம் ரூபாய் கொள்ளை போனது. இந்த தொடர் கொள்ளையில் ஈடுபடுவது வடமாநில கொள்ளையர்கள் என, போலீசார் தெரிவித்த போதும், இதுவரை குற்றவாளிகளை பிடிக்கவில்லை.ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து ஏ.டி.எம்., கொள்ளை சம்பவங்களை நடத்தி வருவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.