உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேங்கியுள்ள மழைநீரால் டெங்கு பாதிப்பு சுற்றுப்புற துாய்மை கடைபிடிக்க அறிவுறுத்தல்

தேங்கியுள்ள மழைநீரால் டெங்கு பாதிப்பு சுற்றுப்புற துாய்மை கடைபிடிக்க அறிவுறுத்தல்

தர்மபுரி, டிச. 11-தர்மபுரி மாவட்டத்தில், தொடர் மழை, தேங்கி நிற்கும் மழை நீரால், வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு வேகமாக பரவும் என்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க, சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கடந்த வாரம் தர்மபுரி மாவட்டத்தில் பெய்த கன மழையால், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் என, பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்தல் மற்றும் சளி, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை மக்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, தர்மபுரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாத வண்ணம் துரிதமான நடவடிக்கை சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், நாளொன்றுக்கு, 10 முதல், 20 பேர் வரை சாதாரண காய்ச்சல் பாதிப்பு சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். குழந்தைகள், பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது தலைமை மருத்துவமனையில் பரிசோதனை செய்து, சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு என தனித்தனியாக டெங்கு காய்ச்சலுக்கான, 100 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல், மாவட்டத்திலுள்ள, 9 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 10 படுக்கைகள் வீதம் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி