உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ரூ.107 கோடி நிதி

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ரூ.107 கோடி நிதி

கிருஷ்ணகிரி: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட செயல்பாட்டுக்காக, 107 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டு, 880 பணிகள் செய்யப்பட்டு வருகிறது,'' என கலெக்டர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பணிகளை முறைப்படுத்தி அதன் தரத்தை உயர்த்தவும், அதிக அளவில் தொழிலாளர்களை ஈடுபடுத்தவும் பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள அனைத்து உதவி பொறியாளர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. பயிற்சியை துவக்கி வைத்து கலெக்டர் மகேஸ்வரன் பேசியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 995 குடும்பத்தினர் பணிபுரிய பதிவு செய்துள்ளனர். 2 லட்சத்து 65 ஆயிரத்து 95 நபர்களுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 107 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக நிதி பெறப்பட்டு இதன் மூலம், 880 பணிகள் எடுத்து செய்யப்பட்டு வருகிறது. இதுவரை, 27 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் செய்யப்படும் பணிகளால் அந்த பகுதி மக்கள் பயன்பெறவேண்டும். ஏரி குளங்கள் தூர் வாரும் போது, கொட்டப்படும் மண், கரைகளை பலப்படுத்துவதாக அமைய வேண்டும். மழைகாலங்களில் கொட்டப்பட்ட மண் மீண்டும் சரிந்து பள்ளத்திற்கு வராமல் தடுக்க, தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனசேகரன், செயற்பொறியாளர் மலர்விழி, உதவி செயற்பொறியாளர்கள் மாது, மனோகரன், அருள்செல்வி, சிவசங்கரன், உதவி திட்ட அலுவலர்கள் பாலையா, அசோகன், பன்னீர் செல்வம், மண்டல அலுவலர்கள் நித்தியா, எத்திராஜீலு, சந்திரபால், கமலாபாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ