ஆவண எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகம் முன், பத்திரப்பதிவு மற்றும் நில அளவை பணிகளை தனியார் மயமாக்கும் அரசு சார்பு முயற்சிகளுக்கும், அரசின் 'இ - டெண்டர்' மாதிரி மையம் அமைப்பதை கண்டித்தும், ஆவண எழுத்தர்கள் மற்றும் தட்டச்சு நிலைய உரிமையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.* தமிழக பதிவுத்துறையில், 'ஸ்டார் 3.0 திட்டம்' கடந்த ஆக., மாதம், 17ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்கள், பதிவுத்துறை அலுவலகங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியத்தை குறைக்கும் வகையில், முதல் வீட்டுமனை விற்பனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை பத்திரங்களை, இணையவழியாக பதிவு செய்யும் வசதி அறிமுகமாகி உள்ளது. இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தினர், ஓசூர் சார்பதிவாளர் அலுவலகம் முன் நேற்று காலை போராட்டம் நடத்தினர். துணை மேயர் ஆனந்தய்யா உட்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல், சூளகிரி மற்றும் ஊத்தங்கரையில் ஆவண எழுத்தாளர்கள் சார்பில், அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் பதிவு துறை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து பத்திர எழுத்தர் சங்கத்தினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.