மா வகைகளுக்கு குறைந்த விலை நிர்ணயம் முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் அதிருப்தி
கிருஷ்ணகிரி:மா வகைகளுக்கு முத்தரப்பு கூட்டத்தில் குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மா விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மா விலை நிர்ணயம் செய்ய முத்தரப்பு கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில் மாங்கூழ் தொழிற்சாலை உற்பத்தியாளர்கள், மா விவசாயிகள் கலந்து கொண்டனர். மாங்கூழ் உற்பத்தியாளர்கள் பேசுகையில், 'கடந்தாண்டு உற்பத்தி செய்த மாங்கூழ் டன் கணக்கில் இருப்பு உள்ளது. எனவே, பெங்களூரா ரக மா கிலோ ஒன்று, 12- ரூபாய், அல்போன்சா ரக மா கிலோ ஒன்றுக்கு, 25- ரூபாய் அளவில் மட்டுமே வழங்க முடியும். மாங்கூழ் தொழிற்சாலைகளில் வரும், 5ல், உற்பத்தி தொடங்கும். ஒரு ஆண்டில், 3 மாதங்களில் மட்டுமே மாங்கூழ் உற்பத்திக்காக, தொழிற்சாலை இயக்கப்படுகிறது. மீதமுள்ள, 9 மாதங்களில் மின் தேவையை குறைத்து கொள்ளவும், தேவைப்படும் போது உயர்த்திக் கொள்ளவும், அரசு வழிவகை செய்ய வேண்டும்' என்றனர்.மா விவசாயிகள் பேசுகையில், 'கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக, மா விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.மா சீசன் முடியும் வரை, உள்ளூர் விவசாயிகளிடம் மட்டுமே மாங்காய்கள் கொள்முதல் செய்ய முன்னுரிமை வழங்க வேண்டும். பெங்களூரா ரக மா கிலோ, 25 ரூபாய்க்கு-ம், அல்போன்சா ரக மா கிலோ, 50- ரூபாய்க்கும் வழங்க வேண்டும். மா விவசாயிகள் பலர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அனைத்து ரகங்களையும் உற்பத்தி செய்யும் மா விவசாயிகளின் கருத்தை கேட்டு, விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், தற்போது நிர்ணயித்துள்ள விலை அதிருப்தி அளிக்கிறது' என்றனர்.தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பேசுகையில், ''மா விவசாயிகளுக்கு மாங்கூழ் உற்பத்தி செய்யும் நிறுவனத்தினர் உறுதுணையாக இருக்க வேண்டும். இருதரப்பிற்கும் பாதிப்பில்லாத வகையில், விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கொள்முதல் அதிகரிக்கும் மே, 2வது வாரத்தில் மீண்டும் முத்தரப்பு கூட்டம் நடத்தி, மா விலை நிர்ணயம் செய்யப்படும்,'' என்றார்.