2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை ஷேர் மார்க்கெட் பண நஷ்டத்தால் விபரீதம்
ஓசூர்: ஷேர் மார்க்கெட்டில் பண நஷ்டம் ஏற்பட்டதால், இரு மகன்களை கொன்று, தந்தை தற்கொலை செய்து கொண்டார். துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்தவர் சிவபூபதி, 45; இவரது மனைவி பார்வதி, 38; தம்பதியின் மகன்கள் நரேந்திர பூபதி, 14, லத்தீஷ் பூபதி, 11. சிவபூபதி, சென்னையில் நடத்தி வந்த நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், மூன்றாண்டுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு வந்தார். குறிஞ்சி நகரில், வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்தார். மகன்கள் அரசு பள்ளியில் ஒன்பது மற்றும் ஏழாம் வகுப்பு படித்தனர். தீபாவளிக்காக ஒரு வாரத்துக்கு முன், பார்வதி சொந்த ஊருக்கு சென்று விட்டார். மகன்களுடன் சிவபூபதி தங்கியிருந்தார். நேற்று காலை, 6:15 மணிக்கு, ஓசூர் அகிலா கார்டனில் வசிக்கும் தன் தம்பி சிவபிரகாசத்துக்கு, போன் செய்த சிவபூபதி, இந்த உலகத்தை விட்டு செல்வதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், ஹட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீசார், பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். அறையில் சேலையில் துாக்கிட்ட நிலையில் சிவபூபதி சடலமாக தொங்கினார். மகன்கள் இருவரும், துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தனர். சிவபூபதி எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'ஷேர் மார்க்கெட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் அதிகரித்து விட்டது. அதனால், உலகத்தை விட்டு செல்கிறேன். என் இரு மகன்களையும் அழைத்து செல்கிறேன்' என இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.