தென்பெண்ணையில் நுரை வௌ்ளம்
ஓசூர்; ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், நேற்று தென்பெண்ணை ஆற்றில் குவியல், குவியலாக ரசாயன நுரை தேங்கியது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர்பிடிப்பு பகுதியான கர்நாடகாவில் கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், 572.90 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 904.49 கன அடியானது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.98 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், தென்பெண்ணை ஆற்றில், 706.43 கன அடி, வலது, இடது கால்வாயில் விவசாய பாசனத்திற்காக, 88 கன அடி என, 794.43 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.அணையிலிருந்து தென்பெண்ணை ஆறு மற்றும் பாசன கால்வாயில் வெளியேறிய நீரில், ஐந்தாவது நாளாக நேற்று, ரசாயன நுரை பெருக்கெடுத்தது. ஆற்றில் தண்ணீர் தெரியாத அளவிற்கு குவியல், குவியலாக ரசாயன நுரை தேங்கியதால், அணை அருகே செல்ல முடியாத அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசியது. தொடர்ந்து ரசாயன நுரை ஏற்பட்டு வருவதால், அணை பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.