ரூ.100 கோடியில் அரசு தலைமை மருத்துவமனை மார்ச் மாதத்தில் இடமாற்றம் செய்ய திட்டம்
ஓசூர், ஓசூரில், 100 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனை வரும் மார்ச் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்டப்பட்டதால், ஓசூர் தாலுகா மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அரசு அறிவித்தது.ஓசூரில் உள்ள தேன்கனிக்கோட்டை சாலையில், தற்போது மருத்துவமனை செயல்படும் இடம், போதிய அளவில் இல்லாததால், ராயக்கோட்டை சாலையில் உள்ள காரப்பள்ளி அருகே, 100 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது.இப்பணியை கடந்தாண்டு ஜன., மாதம், முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் முழு பணிகளும் முடிந்து விடும். அடுத்தாண்டு பிப்., அல்லது மார்ச் மாதம், புதிய கட்டடத்திற்கு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இடமாற்றம் செய்யப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம், 2.41 லட்சம் சதுர அடி பரப்பளவில், மொத்தம், 419 படுக்கை வசதிகளுடன் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.புதிய மருத்துவமனை கட்டடம் பயன்பாட்டிற்கு வந்த பின், தேன்கனிக்கோட்டை சாலையில் இயங்கும் அரசு தலைமை மருத்துவமனை மொத்தமாக இடமாற்றம் செய்யப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தற்போதைய மருத்துவமனையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.அவசர கால சிகிச்சை, மகப்பேறு உள்ளிட்ட வசதிகளுடன், மருத்துவமனை தொடர்ந்து செயல்பட வேண்டும் என, ஓசூர் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.