நாய் கடி விபரங்களை பொதுமக்கள் தெரிவிக்க ஓசூர் மாநகராட்சியில் தொலைபேசி எண்கள்
ஓசூர், :ஓசூர் மாநகராட்சியில், நாய் கடி குறித்த தகவல்களை தெரிவிக்க, 'வாட்ஸாப்' மற்றும் தொலைபேசி எண்கள், ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு கூட்டம், அதன் தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் ஷபீர் ஆலம், மாநகர நல அலுவலர் அஜிதா முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், ஓசூர் மாநகராட்சி பகுதியில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல், பள்ளிகள் அருகே குட்கா பொருட்கள் விற்பதை கண்டறிந்து, கடைக்கு, 'சீல்' வைத்தல், வீடு, வீடாக டெங்கு கொசுப்புழு உற்பத்தியை கண்டறிந்து அழிப்பது. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில், சிறப்பு முகாம்கள் நடத்த ஏதுவாக முன்னேற்பாடு மற்றும் முகாம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை துரிதப்படுத்த, விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில், குழு தலைவர் மாதேஸ்வரன் பேசியதாவது:தளி அருகே நாய் கடித்து, ரேபீஸ் தாக்கி பட்டதாரி வாலிபர் உயிரிழந்துள்ளார். அதுபோல், ஓசூர் மாநகராட்சி பகுதியில் நாய் கடித்து, மக்களுக்கு ரேபீஸ் நோய் பரவாமல் தடுக்க, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஓசூர் மாநகராட்சியில், 94899 09828 என்ற, 'வாட்ஸாப்' எண் மற்றும் 04344 247666 என்ற தொலைபேசி எண்ணிற்கு, நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அருகே வசிப்போர் விபரங்களை தெரிவிக்கலாம். அதன் மூலம், நாய் கடித்தவரை கண்காணிக்க முடியும். ரேபீஸ் நோய் தொடர்பாக ஆங்காங்கே விழிப்புணர்வு பேனர் வைக்க வேண்டும். ஓசூர் அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் அறைக்கு போதிய வசதிகள், கண்காணிப்பு கேமரா மற்றும் காவலாளி போன்ற வசதிகளை செய்து கொடுத்து பராமரிக்க வேண்டும். நோயாளிகள் தங்குவதை உறுதிப்படுத்த பதிவேடு பராமரிக்க வேண்டும். ஓசூர், சாய்பாபா கோயில் அருகே, பிளாஸ்டிக் குடோன்களில் ஆய்வு நடத்த வேண்டும். குப்பை தரம் பிரித்து தர மாணவ, மாணவியர் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.கவுன்சிலர் லட்சுமி, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள், தங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்த மனுக்களை வழங்கினர்.