திருமணமான சிறுமி தற்கொலை: ஓசூர் சப்-கலெக்டர் விசாரணை
பாகலுார்: பாகலுாரில், திருமணமான பீஹாரை சேர்ந்த, 16 வயது சிறுமி தற்கொலை குறித்து, ஓசூர் சப்-கலெக்டர் விசாரிக்கிறார். பீஹார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் உதயசதா, 19. இவரும், அதே மாநிலத்தை சேர்ந்த ஜோதிகுமாரி, 16, என்பவரும் கடந்த, 2 ஆண்டுக்கு முன் காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே தாசரப்பள்ளியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தனர். கடந்த, 9ம் தேதி மதியம், தன் பெற்றோருடன் மொபைல்போனில் ஜோதிகுமாரி பேசினார். அப்போது வார்த்தை தகராறு ஏற்படவே மனமுடைந்த அவர், தன் மொபைல்போனை கீழே போட்டு உடைத்து விட்டு, வீட்டிலிருந்து வெளியே சென்றார்.வெகுநேரமாகியும் அவர் திரும்பாததால், கணவர் உதயசதா அவரை தேடி சென்றார். அப்பகுதி தனியார் நிலத்தில் இருந்த மரத்தில், ஜோதிகுமாரி துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். நேற்று முன்தினம் உதயசதா பாகலுார் போலீசார் புகார் செய்தார். திருமணமான இரு ஆண்டுகளில், சிறுமி தற்கொலை செய்த நிலையில், ஓசூர் சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி விசாரிக்கிறார்.