தனி நபர், குழுக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி, பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் தனி நபர், குழுக்கள் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்திய கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய, தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், கடன் உதவி வழங்கி வருகிறது. தனிநபர் கடன் திட்டத்தில், சிறு வர்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்கள், கைவினை பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிக பட்சமாக, 25 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.ஆண்டு வட்டி விகிதம், 1.25 லட்சம் ரூபாய் வரை, 7 சதவீதம் மற்றும், 1.25 லட்சம் ரூபாய் முதல், 15 லட்சம் ரூபாய் வரை, 8 சதவீதம். கடனை திரும்ப செலுத்தும் காலம் 3 முதல், 5 ஆண்டுகள். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும், கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது-.