ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில், ரகளையில் ஈடுப்பட்டவர்களை போலீஸார் தாக்கியதால், ஆத்திரமடைந்த ஹிந்து முன்னணியினர் போலீஸாரை மன்னிப்பு கேட்கக் கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை தாலுகாவில் விநாயகர் சதூர்த்தியையொட்டி ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் மொத்தம், 169 விநாயகர் சிலைகளை வைக்கப்பட்டது. இந்த சிலைகள், நேற்று காலை முதல் ஊர்வலமாக எடுத்து சென்று நீர், நிலைகளில் கரைக்கப்பட்டது. தளியில், 30 சிலைகளும், தளி உத்தனப்பள்ளியில் 39 சிலைகளும், ராயக்கோட்டையில், 40 சிலைகளும், கெலமங்கலத்தில் 32 சிலைகளும், அஞ்செட்டியில், 17 சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்பட்டது. பதட்டம் மிகுந்த மதகொண்டப்பள்ளியில் விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி, எஸ்.பி., கண்ணன், ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சுஹாசினி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்போடு, நேற்று மாலை முதல், 10 சிலைகளை இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மதகொண்டப்பள்ளியில் இருந்து பின்னமங்கலம் சாலை வழியாக ஊர்வலமாக கவுரம்மா ஏரியில் கரைக்க எடுத்துச் சென்றனர். மதகொண்டப்பள்ளி மசூதி அருகே மாலை 6 மணிக்கு சென்ற போது, தொழுகை நேரம் என்பதால், போலீஸார் சிலை எடுத்துச் செல்வதை தடுத்து நிறுத்தினர் தொழுகை முடிந்த பின், எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், தொழுகை முடிந்த பின்னும், சிலையை எடுத்துச் செல்லாமல் உற்சாக மிகுதியில் ஆட்டம் போட்டனர். பதட்டம் ஏற்பட்டதால், போலீஸார் இளைஞர்களை தடியால் அடித்து சிலையை எடுக்குமாறு எச்சரித்தனர். ஆத்திரமடைந்த ஹிந்து அமைப்பினர், இளைஞர்களை தாக்கிய போலீஸாரை மன்னிப்பு கேட்கும்படி 'திடீர்' போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானம் செய்தும், அவர்கள் இரவு 8.30 மணி வரை சிலைகளை எடுக்காமல் மறியலில் ஈடுப்பட்டனர். இதனால், தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் கதிர்வேல், ஹிந்து அமைப்பினரிடம் மன்னிப்பு கேட்டார். 2 மணி நேரம் போராட்டத்திற்குபின் ஹிந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கவுரம்மா ஏரியில் கரைத்தனர்.