| ADDED : செப் 26, 2011 11:45 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கிருஷ்ணகிரி அடுத்துள்ளது பாஞ்சாலியூர் கிராமம். இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதற்காக அருகில் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக மின் விநியோகம் அடிக்கடி தடைபட்டுவருகிறது. மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் விநியோகம் இருந்தாலும் குடிநீர் விநியோகத்திற்காக அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டாரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த பகுதியில் வசிப்போர் மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாஞ்சாலியூரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை பாஞ்சாலியூர் அருகே காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் எல்லப்பன் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பாஞ்சாலியூருக்கு தனியாக ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.