ஓசூர்: ஓசூர் எல்.ஐ.சி., அலுவலக கட்டிடத்தில், அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ
விபத்தில், பல கோடி ரூபாய் எல்.ஐ.சி., பாலிசி ஆவணங்கள், முதிர்வு தொகை
பத்திரங்கள் மற்றும் ரசீதுகள் எரிந்து நாசமடைந்தது. இதனால் எல்.ஐ.சி.,
பாலிசி எடுத்த, பல லட்சம் பாலிசிதாரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.ஓசூர் தமிழ்நாடு ஹோட்டல் எதிரே, கிருஷ்ணகிரி சாலையில், எல்.ஐ.சி., அலுவலகம்
செயல்படுகிறது. இங்கு, 1,300க்கும் மேற்பட்ட எல்.ஐ.சி., முகவர்கள் மூலம்
,பல கோடி ரூபாய்க்கு பொதுமக்கள் எல்.ஐ.சி., பாலிசி எடுத்துள்ளனர். ஓசூர்
தொழிற்சாலைகள் நிறைந்த தொழில் நகரம் என்பதால், இங்கு பல லட்சம்
பாலிசிதாரர்கள் பல்வேறு திட்டங்களில் எல்.ஐ.சி., பாலிசி எடுத்துள்ளனர்.
இந்த அலுவலகத்தில் பாலிசிதாரர்களுக்கு எல்.ஐ.சி., பாலிசி வழங்குவது,
முதிர்வு தொகை, காப்புதொகை, பாலிசிகளுக்கு கடன் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு
பணிகள் நடக்கிறது.இந்நிலையில், இந்த எல்.ஐ.சி., அலுவலக கட்டிடத்தை
சுற்றிலும் நேற்று அதிகாலை திடீரென்று புகை மண்டலமாக காணப்பட்டது. சிறிது
நேரத்தில் இரண்டாவது மாடி கட்டிடத்தில் இருந்து அதிகளவு புகை வெளியேற
துவங்கியது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு
தகவல் தெரிவித்தனர். சிப்காட் தீயணைப்பு அதிகாரி தியாகராஜன் மற்றும்
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கட்டிடத்தில் பிடித்த தீயை
அணைக்க முயன்றனர்.கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தீ கொளுந்து விட்டு
எரிந்ததால், அந்த அறைகளில் இருந்த பால்சிலிங் மேற்கூரை பிளந்து கீழே
விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைந்து தீயை அணைக்க முடியவில்லை.
இரண்டாவது மாடியில் இருந்து கீழ் தளத்தில் உள்ள அறைகளுக்கும் தீ பரவத்
துவங்கியது. இதனால் தீயணைப்பு வீரர்கள், இரண்டாவது மாடி ஜன்னல் கண்ணாடிகளை
உடைத்து வெளிப்புறமாக இருந்து தண்ணீர் பீச்சியடித்தனர். 2 மணி நேரம்
போராட்டத்துக்கு பின், தீயை அணைத்தனர்.இரண்டாவது மாடியில்தான் பாலிசி
வழப்பட்ட ஆவணங்கள், ரசீதுகள் மற்றும் அவற்றை தினசரி ஆன்லைன் மூலம் பதிவு
செய்யும் கம்ப்யூட்டர்கள் இருந்தன. தீ விபத்தில் தீயில் கருகியும், தண்ணீர்
பீச்சியடித்ததாலும் இரண்டாவது மாடியில் இருந்த எல்.ஐ.சி., ஆவணங்கள், 20
கம்ப்யூட்டர்கள், சேர்கள், ÷ஷாபா உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நாசமடைந்தன.
ஹட்கோ போலீஸார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், இரண்டாவது
மாடியில் நள்ளிரவு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என,
சந்தேகிக்கின்றனர்.பாலிசிதாரர் அச்சப்படவேண்டாம்: அதிகாரிஓசூர் எல்.ஐ.சி.,
மேலாளர் சாந்தி(பொ) கூறுகையில், ''கீழ்தளத்தில்தான் எல்.ஐ.சி., ஆவணங்கள்
இருந்தன. தீ பிடித்த மாடி கட்டிடத்தில் கம்ப்யூட்டர்கள் மற்றும் அது
சம்பந்தமான ஒரு சில ஆவணங்கள் மட்டும் இருந்தன. தற்போது, எல்.ஐ.சி.,
பாலிசிகள் அனைத்தும் டேடா சர்வர் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன.
அதனால் பாலிசிதாரர்களுடைய அனைத்து ஆவணங்களும் சேலம் தலைமை அலுவலகத்தில்
பாதுகாப்பாக உள்ளன. பாலிதாரர்கள் அச்சப்பட தேவையில்லை,'' என்றார்.