கர்நாடகா - ஓசூர் இடையே விரைவில் மெட்ரோ ரயில் சேவை; அமைச்சர் உறுதி
கர்நாடகா - ஓசூர் இடையே விரைவில் மெட்ரோ ரயில் சேவை; அமைச்சர் உறுதி ஓசூர், டிச. 8-''கர்நாடகா - ஓசூர் இடையே விரைவில் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கப்படும்,'' என, அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்தார்.ஓசூர், முத்துராயன் ஜீபி, தோட்டகிரி, ஜே.ஜே., நகர், சூடவாடி, குருபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளிகளில், மாநில நிதிக்குழு மானிய திட்டத்தில், 2.30 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா முன்னிலை வகித்தனர்.அமைச்சர் சக்கரபாணி கட்டடங்களை திறந்து வைத்து பேசுகையில், ''கர்நாடகா மாநிலம், பெங்களூரு - ஓசூர் இடையே மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் துவங்கும். ஓசூர் பகுதியில், 2,000 ஏக்கரில் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும். ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்கள் பயனடையும் வகையில், 2ம் கட்டமாக, ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன், 8,000 கோடியில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதை விரைவில் முதல்வர் துவக்கி வைப்பார்,'' என்றார்.ஓசூர் சப்--கலெக்டர் பிரியங்கா, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மண்டல தலைவர் காந்திமதி கண்ணன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., அலுவலகத்தில், மூலதன மானிய திட்டத்தில், 99 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய அலுவலகம் கட்டும் பணியை, அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.