தி.மு.க., கவுன்சிலர் வீட்டில் மர்ம மரணம்
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் லிங்கோஜிராவ், 45; டவுன் பஞ்., 11வது வார்டு கவுன்சிலர். தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி தளி தொகுதி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளராக இருந்தார். நேற்று முன்தினம் மதியத்திற்கு பின், கட்சியினர், உறவினர்கள் போன் செய்த நிலையில், லிங்கோஜிராவ் எடுக்கவில்லை.நேற்றும் அவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்க செல்லவில்லை. சந்தேகமடைந்த கட்சியினர், உறவினர்கள், நேற்று மதியம் அவரது வீட்டிற்கு சென்றனர். கதவு திறந்திருந்த நிலையில், லிங்கோஜிராவ் தலைகுப்புற விழுந்து கிடந்தார். மூக்கில் காயமடைந்து ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி கிடந்தார். போலீசார் பார்த்த போது, ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.அவரது மனைவி, குழந்தைகள் பெங்களூரு சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார். தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என தெரியவில்லை. மர்ம மரணம் என வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.