உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளிக்கு சாலை வசதி பெற்றோர் தர்ணா போராட்டம்

அரசு பள்ளிக்கு சாலை வசதி பெற்றோர் தர்ணா போராட்டம்

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர், செல்லக்குட்டப்பட்டி பஞ்., காட்டுக்கொல்லை கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, நாகர்கோவில், காட்டுக்கொல்லையை சேர்ந்த, 26 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். காட்டுக்கொல்லை பகுதி மக்களும், தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியரும், பாரூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் பட்டா நிலம் வழியாக, 50 ஆண்டுகளுக்கு மேலாக சென்று வருகின்றனர். இந்நிலையில், ஆறுமுகம், தன் பட்டா நிலத்தில் வழி விட மறுத்து, கடந்த, 3 மாதங்களுக்கு முன் முள்வேலி அமைத்து, சாலையை அடைத்தார். இதனால், காட்டுக்கொல்லை பகுதியிலுள்ள, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் மாணவ, மாணவியர் சிரமத்திற்கு ஆளாகினர். நேற்று மாணவர்களின் பெற்றோர், 50க்கும் மேற்பட்டோர் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கேட்டு, அரசு தொடக்கப்பள்ளி முன், தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு சென்ற போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆர்.ஐ., சசிகுமார் ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தி, ஆறுமுகம் நிலத்தில் தற்காலிகமாக சாலை அமைத்து, பள்ளிக்கு செல்ல வழி வகை செய்தனர். வரும், 14ல் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் முன்னிலையில், கிராம மக்கள் மற்றும் நில உரிமையாளர் ஆகியோரிடையே, சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால், தர்ணாவில் ஈடுபட்ட பெற்றோர் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை