பட்டா கேட்டு இருளர் இன மக்கள் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் தர்ணா
பட்டா கேட்டு இருளர் இன மக்கள் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் தர்ணாகிருஷ்ணகிரி, நவ. 5-கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியகோட்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட பாம்புகாரன்கொட்டாயை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள், கூறியதாவது:எங்கள் பகுதியில் கடந்த, 75 ஆண்டுகளாக, இருளர் இன வகுப்பை சேர்ந்த பழங்குடியினர், 27 குடும்பங்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். எங்களுக்கு அரசு சார்பில், 13 தொகுப்பு வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பட்டா வழங்கப்படவில்லை. கடந்த, 2023, மே, 1ல் இப்பகுதியில் வசிக்கும், 30 பேருக்கு வனச்சட்டத்தில் தனி உரிமை பெற, கிராம சபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டமும் நடந்த நிலையில், எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும், 27 குடும்பத்தினருக்கும் மாற்றிடம் வழங்குவதாக கூறி, நாங்கள் இருக்கும் இடத்தை காலி செய்ய, அலுவலர்கள் கூறுகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.அவர்களிடம், கிருஷ்ணகிரி தாசில்தார் வளர்மதி மற்றும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நீங்கள் யாரும் இருக்கும் இடத்தை காலி செய்ய சொல்லவில்லை. மாறாக, புதிதாக ஒதுக்கும் இடத்திற்கு பட்டாவுடன் நிலம் வழங்கப்படும் என, மட்டுமே தெரிவிக்கப்பட்டது. உங்கள் கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுவாக கொடுங்கள், எனக்கூறி, அனுப்பி வைத்தனர்.