பெங்களூரு ரயில் பாதைக்கு ஓசூர் அருகே மக்கள் எதிர்ப்பு
ஓசூர்:கர்நாடகா மாநிலம், பெங்களூரு நகரைச் சுற்றி, 287 கி.மீ.,க்கு ரயில்வே பாதை அமைக்கப்பட இருப்பதாகவும், அதில் தமிழக எல்லையான ஓசூர் அருகே பாகலுார், கொடியாளம், ஈச்சங்கூர், கொத்தப்பள்ளி, கூஸ்தனப்பள்ளி, சேவகானப்பள்ளி, ஜூஜூவாடி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி, 40 கி.மீ.,க்கு ரயில்வே பாதை செல்வதாகவும் தகவல் பரவி வருகிறது.இத்திட்டம், 23,000 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், தமிழக எல்லையில் குறிப்பிட்டுள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில், 300 மீட்டர் அளவிற்கு நிலத்தை அரசு கையகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், சர்வே நிறுவனம் நடத்திய நில அளவீடை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழக எல்லையில் இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனக் கூறி, கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷிடம் தெரிவித்தனர். அவர் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று அவர் பார்வையிட்டார். பாகலுார் அருகே விவசாயிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என, மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார். மத்திய அரசு ஏதோ ஒரு திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.