| ADDED : ஜன 16, 2024 10:39 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.ஆண்டுதோறும் தை முதல் நாள், பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு பொதுமக்கள், விவசாயிகள் நன்றி கூறினர். தொடர்ந்து தங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்ட மையநுாலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் நுாலக பணியாளர்கள் மற்றும் வாசகர் வட்ட அங்கத்தினர்கள் போட்டித் தேர்வு மாணவ மாணவியர் மற்றும் வாசகப் பெருமக்கள் கலந்து கொண்டனர். நுாலகர் பிரேமா, வாசகர் வட்ட அங்கத்தினர் பத்மாவதி உள்ளிட்டோர் வரவேற்றனர்.வீர வன்னியர் குல சத்ரியர் நல சங்கத்தின் சார்பில், காவேரிப்பட்டணம் சரஸ்வதி கார்டனில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் ஆலயத்தில், பொங்கல் விழா நடந்தது. சங்க தலைவர் கணேஷ் தலைமையில் நடந்த விழாவில் பலர் கலந்து கொண்டனர்.மாவட்டத்தில் பல்வேறு பஞ்.,களில் பொங்கல் பண்டிகையையொட்டி கோலப்போட்டி, சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.