150 சிறு, குறு விவசாயிகளுக்கு புல் நறுக்கும் கருவி வழங்கல்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, கால்நடை துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 150 சிறு, குறு விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கும் பணி நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர் எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் விவசாயிகளுக்கு புல் நறுக்கும்கருவிகளை வழங்கினர்.அப்போது கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது: தீவன விரயத்தை குறைப்பதற்காகவும், கால்நடைகளின் செரிமான தன்மையை அதிகரிக்கவும், கால்நடைகளின் உற்பத்தி திறனை பெருக்கவும், 50 சதவீத மானியத்தில் மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகளை அரசு வழங்குகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 150 சிறு, குறு விவசாயிகளுக்கு 43.51 லட்சம் ரூபாய் மதிப்பில், 50 சதவீத மானியத்தில் மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவி வழங்கப்படுகிறது.இவ்வாறு பேசினார்.கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் இளவரசன், துணை இயக்குனர் ராமகிருஷ்ணன், உதவி இயக்குனர் மகேந்திரன், கால்நடை மருத்துவர் ரமேஷ், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.