அந்த மூணு பேரையும் ஜெயில்ல போடுங்க...! ஜாமின் ரத்து கோரி மறியல்
தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டையில், அடிதடி வழக்கில் சிக்கிய மூன்று பேருக்கு கோர்ட் ஜாமின் வழங்கியதை கண்டித்து, மக்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, நேதாஜி நகரை சேர்ந்த சக்தி வேல், 30; தனியார் நிறுவன கலெக் ஷன் ஏஜன்ட். இவரும், நண்பர்களும் தேன்கனிக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த, 23ம் தேதி மதியம், 2:30 மணிக்கு மாதா கோவில் தெரு வழியாக மேள, தாளங்கள் முழங்க ஆடியபடி சென்றனர். இதனால், அப்பகுதியை சேர்ந்த அம்ரீஷ், 25, அஜய், 24, பிருத்திவிராஜ், 25, விக்னேஷ், 24, ஆகியோர், 'எங்க ஏரியாவில் ஏன் ஆட்டம் போடுகிறீர்கள்?' எனக்கேட்டு, தகாத வார்த்தையால் பேசி, உருட்டுகட்டையால் தாக்கினர். இதில், சக்திவேல், அவரது நண்பர் அருணாச்சலம், 27, ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சக்திவேல் புகார்படி, அம்ரீஷ், அஜய், விக்னேஷ் ஆகிய மூவரை கைது செய்த போலீசார், தேன்கனிக்கோட்டை ஜே.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிபதி ஜாமினில் விடுவித்தார். மூவரையும் ஜாமினில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை, தேன்கனிக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன், கெலமங்கலம் சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ் பேச்சு நடத்தி, நீதிபதியிடம் நடந்த விபரங்களை எடுத்துக் கூறி, மூவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.