கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து நாசமாகின.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெப்பத்தின் அளவு, நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கடந்த, 2 நாட்களாக பகலில் வெயில் இருந்தாலும், மாலையில் மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, நெடுங்கல் பகுதி சுற்றுவட்டாரத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. காற்றும் பலமாக வீசியதால், ஆங்காங்கே மரங்கள் முறிந்து, மின்கம்பங்கள் மீது விழுந்து, மின்தடை ஏற்பட்டது.கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் மட்டும், 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், 60க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. மேலும், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் நகரில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பால், மழை நீர் சாலையில் தேங்கியது. கிருஷ்ணகிரி பழைய பஸ் ஸ்டாண்ட், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் உள்ளிட்ட இடங்களில், மழை நீர் தேங்கியது. நேற்று முன்தினம் இரவு முதல் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தின் பல இடங்களில், பலத்த காற்றுக்கு மரங்கள் சாய்ந்ததில், பல மின்கம்பங்கள் சேதமாகி உள்ளன. மரங்களை அப்புறப்படுத்தி, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், நேற்று மாலை வரை, மின் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு மின்தடையை சரிசெய்தனர்' என்றனர்.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணகிரி அணை பகுதியில் அதிகபட்சமாக, 93 மி.மீ., மழை பதிவானது. நெடுங்கல்லில், 53, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரியில் தலா, 25, பாரூர், 19, போச்சம்பள்ளி, 10.60, கெலவரப்பள்ளி அணை, 5.20, பெனுகொண்டாபுரம், 2.30 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்புகிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்துள்ளது.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு இந்தாண்டில் கடந்த மார்ச், 9 முதல், 25 வரை, 2 முறை நீர்வரத்து முற்றிலும் நின்றது. தொடர்ந்து, 3வது முறையாக கடந்த மார்ச், 31 முதல் மே, 6 வரை, 37 நாட்கள் நீர்வரத்து முற்றிலும் நின்றதால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்தது. கடந்த, 5 நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை மற்றும் கே.ஆர்.பி., அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 12 கன அடியாக நீர்வரத்தான நிலையில் நேற்று, 158 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து இடது மற்றும் வலது புற வாய்க்கால் மூலம், 12 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 38.65 அடியாக நீர்மட்டம் இருந்தது.