சந்திர மவுலீஸ்வரர் கோவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி சந்திர மவுலீஸ்வரர் கோவில் அருகே இருந்த, கோவிலுக்கு சொந்தமான இடத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்போடு, ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் அகற்றினர்.கிருஷ்ணகிரி, சந்திரமவுலீஸ்வரர் கோவில் அமைந்துள்ள ராசுவீதியில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சிலர் வீடுகள் கட்டியும், வழிப்பாதையையும் ஆக்கிரமித்தும் இருந்தனர். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் உத்தரவுப்படி, கிருஷ்ணகிரி மண்டல உதவி கமிஷனர் ராமுவேல் தலைமையிலான அலுவலர்கள் நேற்று, அந்த வீதியில், கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட, 11 வீடுகள் மற்றும் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர்.கோவில் செயல் அலுவலர்கள் சித்ரா, ரகுவர ராஜ்குமார், ஆய்வாளர்கள் கவிப்பிரியா, ராமமூர்த்தி மற்றும் கோவில் அறங்காவலர்கள் உடனிருந்தனர். கிருஷ்ணகிரி டி.எஸ்.பி.,முரளி தலைமையில், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.