வாக்காளர் சிறப்பு திருத்தத்தில் விண்ணப்பித்து பட்டியல் தயாரிப்புக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்
கிருஷ்ணகிரி, வாக்காளர் சிறப்பு திருத்தத்தில், முறையாக விண்ணப்பித்து வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பேசினார்.உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 333 பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. பர்கூர் ஊராட்சி ஒன்றியம், அஞ்சூர் பஞ்.,ல் நடந்த கிராமசபை கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். பஞ்., நிர்வாக செலவினம், தணிக்கை அறிக்கை மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு உள்பட, 15 பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.தொடர்ந்து, கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது:பிரதமர் ஆவாஸ் யோஜனா, கலைஞர் கனவு இல்லத்தில் வீடுகள், பழங்குடியினருக்கு பிரதமர் ஜென்மன் திட்டத்திலும், வீடுகள் மற்றும் தொகுப்பு வீடுகள் பழுது பார்க்கவும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வரும், நவ., 4 முதல், டிச., 4 வரை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி வாக்காளர் சிறப்பு திருத்தம் செய்ய வீடுகள் தோறும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் வருவர். அவர்கள் தரும் இரு விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்து, அலுவலர்களிடம் வழங்க வேண்டும். அவற்றில் ஒன்றை உங்களிடமே திருப்பி தருவர். இதன் மூலம், முகவரி மாற்றம், இறந்தவர்கள் பெயர்கள் நீக்கம், புதிய வாக்காளர் சேர்த்தல் விபரங்கள் சரிசெய்யப்பட்டு, வாக்காளர் பட்டியல் தயாரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மகாதேவன், இணை இயக்குனர்கள் இந்திரா (தோட்டக்கலைத்துறை), காளிமுத்து (வேளாண்மை), முன்னாள் பஞ்., பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.