மேலும் செய்திகள்
தமிழ்நாடு விவசாயிகள்சங்கத்தினர் சாலைமறியல்
22-Apr-2025
ராயக்கோட்டை : உத்தனப்பள்ளி அருகே தோட்டத்து வீட்டில் விவசாயி குடும்பத்தை கத்தியை காட்டி மிரட்டி, 8.5 சவரன் நகை, 3.60 லட்சம் ரூபாயை முகமூடி கும்பல் கொள்ளையடித்தது. அப்போது கொள்ளையனில் ஒருவனை, விவசாயி அரிவாளால் வெட்டினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே சஜ்ஜலப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ராஜா - கோவிந்தம்மாள் தம்பதி. உத்தனப்பள்ளி அருகே தொட்டமெட்டறையில் தோட்டத்து வீட்டில் வசிக்கின்றனர். இவர்களுடன், மருமகன் ராமச்சந்திரன், பேத்தி வர்ஷினி உள்ளனர். மகள் ஷிபாராணி சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.ஊரின் ஒதுக்குபுறத்தில் இவர்களின் தோட்டத்து வீடு இருப்பதை நோட்டமிட்ட முகமூடி கொள்ளை கும்பல், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி, தாலி உட்பட, 5.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8.5 சவரன் நகை, பீரோவிலிருந்த 3.60 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர். கொள்ளையர்களில் ஒருவரை, ராமச்சந்திரன் கத்தியால் வெட்டினார். இதில், அவனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், ராமச்சந்திரனை தலையில் தாக்கி விட்டு, அங்கிருந்து காயம்பட்ட கொள்ளையனுடன் காரில் தப்பினர்.சம்பவ இடத்தில் தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ் விசாரணை நடத்தினார். அப்பகுதி, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை கும்பலை பிடிக்க, இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கொங்கு மண்டலத்தில் தோட்டத்து வீடுகளில் முதியவர்களை குறிவைத்து கொலை, கொள்ளை சம்பவங்களை நடத்திய கும்பலுக்கும், இந்த கும்பலுக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் மார்ச் 12ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த லுார்துசாமி, 70, அவரது மனைவியின் தங்கை எலிசபெத், 60, ஆகியோரும்; அதே மாதம், 19ம் தேதி, சூளகிரி அருகே அட்டகுறுக்கியில், நாகம்மா என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டனர். இந்த இரு சம்பவங்களும் புதன்கிழமைகளில் நடந்தன. அதேபோல், புதன்கிழமையான நேற்று முன்தினம் இரவு உத்தனப்பள்ளி அருகே தொட்டமெட்டறையில் கத்திமுனையில் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. மாவட்டத்தில் புதன்கிழமை சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளன.
22-Apr-2025