உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரோஜா செடிகளில் டவுனியா நோய் தாக்கம்; காதலர் தின ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்

ரோஜா செடிகளில் டவுனியா நோய் தாக்கம்; காதலர் தின ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்

ஓசூர்: ஓசூரில், ரோஜா செடிகளில்'டவுனியா' நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால், காதலர் தினத்திற்கான ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, தளி சுற்றுவட்டாரத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி, 2,800 ஏக்கரில் பசுமை குடில்கள் அமைத்து, ரோஜா, ஜெர்புரா, கிரசாந்திமம், கார்னேசன் போன்ற கொய்மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக, 1,600 ஏக்கரில், ரோஜா வகைகளான தாஜ்மகால், பர்ஸ்ட் ரெட், அவலாஞ்சி, நோப்லஸ், கார்வெட், கோல்ட் ஸ்டிரைக் போன்ற மலர்களை, விவசாயிகள் சாகுபடி செய்து, காதலர் தினம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். உள்ளூர் சந்தைக்கும் ரோஜாக்கள் அனுப்பப்படுகின்றன. தற்போது, ரோஜா செடிகளில் 'டவுனியா' நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால், காதலர் தினத்திற்கான ரோஜா ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இது குறித்து, அகில இந்திய மலர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு இயக்குனர் பாலசிவப்பிரசாத் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் டிச., முதல் வாரத்தில் இருந்து, 18 ம் தேதி வரை, பசுமை குடில்களில் மண் சீரமைப்பு பணி, உரமிடுதல், செடிகளை கவாத்து செய்தல் போன்ற பணிகளை செய்து, செடிகளை நல்ல நிலையில் வைத்திருந்தால் தான், காதலர் தினத்திற்கு தரமான ரோஜாக்கள் கிடைக்கும். தற்போது வெயில், பனி, மழை என அடிக்கடி சீதோஷ்ண நிலை மாற்றத்தால், 'டவுனியா', பூஞ்சை நோய் தாக்கம் ஏற்பட்டு செடிகள் பலவீனமாக உள்ளன. இந்த சீதோஷ்ணம் தொடரும் நிலையில், கவாத்து பணி செய்தாலும், செடிகளில் பூக்கள் வராமல், 20 சதவீதம் இலைகள் மட்டுமே வரும். தரமான ரோஜாக்களை சாகுபடி செய்வது கடினம்.'டவுனியா' மற்றும் பூஞ்சான் நோய் தாக்கத்தால், காதலர் தினத்திற்கான சாகுபடி பாதித்து, ஏற்றுமதி குறையும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க, பசுமை குடில்களின் கவர்களை சுத்தம் செய்து, சுண்ணாம்பு மற்றும் காப்பர் கலந்த கலவையை மண்ணில் தெளித்து, சரியான அளவில் பூஞ்சான் கட்டுப்படுத்தும் மருந்து தெளிக்கவேண்டும். பசுமை குடில்களை காற்றோட்டமாகவும், இரவில், 18 முதல், 20 டிகிரி அளவிற்கும், பகலில், 28 முதல், 30 டிகிரி செல்ஷியஸ் வரையும் வெப்பம் இருக்குமாறு செய்ய புகை போடுதல், வெப்பம் வெளியிடும் விளக்குகளை எரிய செய்வது போன்றவற்றை விவசாயிகள் செய்தால், பூஞ்சான் மற்றும் 'டவுனியா' நோயிலிருந்து செடிகளை காப்பாற்ற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை