பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கிய கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ஓசூர், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் தலைமையில், மாநகர நல அலுவலர் அஜிதா மற்றும் ஊழியர்கள், நாமல்பேட்டை பகுதியில் நேற்று கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, சோதனை செய்தனர். அப்போது, கிருஷ்ணா பேப்பர்ஸ் என்ற கடையில், 704 கிலோ அளவிற்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை, பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். அங்குள்ள கடை உரிமையாளர்களிடம், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பட்டியலை கடைகளில் வைக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு, பிளாஸ்டிக் விற்பனை குறித்த தெளிவுரை கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.