காரில் கடத்த முயன்ற ரூ.2 லட்சம்புகையிலை பொருட்கள் பறிமுதல்ஓசூர்: ஓசூர், ஹட்கோ போலீஸ் எஸ்.ஐ., சபரிவேலன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம், பேடரப்பள்ளி பெட்ரோல் பங்க் அருகே, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரை மடக்கி சோதனையிட்டதில், 2.04 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக சேலத்திற்கு கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலம், தேவடாவை சேர்ந்த பிரவீண் விஷ்னாய், ஜெயந்திலால் சுதர், 27 ஆகிய இருவரை கைது செய்தனர்.மாணவி உட்பட மூவர் மாயம்கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகிலுள்ள பகுதியை சேர்ந்தவர் சந்தியா, 19, பிளஸ் 2 மாணவி. கடந்த, 20ல் காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.ஓசூர், ராயக்கோட்டை ரோடு, கோகுல் நகரை சேர்ந்தவர் தேஜாஸ்ரீ, 22. கடந்த, 20ல் அதிகாலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரது பெற்றோர் புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல போச்சம்பள்ளி, ஆண்டவர் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார், 27. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மனைவியுடன் பிரச்னை ஏற்பட்ட நிலையில், கடந்த, 19ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பிரேம்குமார் மனைவி புகார் படி போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.அரசு டிரைவர், கண்டக்டர் மீதுவன்கொடுமை வழக்கு பதிவுஅரூர்: அரசு பஸ்சில், மாட்டிறைச்சி எடுத்துச்சென்ற மூதாட்டியை நடுவழியில் இறக்கி விட்ட பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த நவலையை சேர்ந்தவர் பாஞ்சாலை, 60; இவர் கடந்த, 20 ல் பகல், 12:20 மணிக்கு, அரூரிலிருந்து ஓசூர் செல்லும் அரசு பஸ்சில், பாத்திரத்தில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றார். இதை பார்த்த பஸ் டிரைவர், கண்டக்டர், மோப்பிரிப்பட்டி அருகே, நடுவழியிலேயே அவரை இறக்கி விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக டிரைவர் சசிக்குமார், கண்டக்டர் ரகு ஆகியோரை, நேற்று முன்தினம் போக்குவரத்து கழக நிர்வாகம், 'சஸ்பெண்ட்' செய்தது. மேலும் அவர்கள் இருவர் மீது, பாஞ்சாலை புகார்படி அரூர் போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்துள்ளனர். அரூர் டி.எஸ்.பி., ஜெகன்நாதன் விசாரிக்கிறார்.மத்துாரில் 5 கோவில்களில்நகை, காணிக்கை திருட்டுபோச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, வாலிப்பட்டி பஞ்.,ல் உள்ள, 5 கோவில்களில் ஒரே நாளில், பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது. வாலிப்பட்டி பஞ்.,ல் உள்ள சாலுார் தேசத்து மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து, 10,000 ரூபாயும், கால் பவுன் தாலி திருடப்பட்டுள்ளது. மேலும், அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவில் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். சின்னமாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து அரை பவுன் தாலி மற்றும் உண்டியலில் காணிக்கை, கவுண்டப்பனுார் கோட்டை மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து கால் பவுன் தாலி உண்டியல் காணிக்கை, பெரமனுார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பீரோவை உடைத்து, நான்கரை பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். ஒரே நாளில், 5 கோவில்களில் நடந்த திருட்டு குறித்து, மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.பயங்கர ஆயுதங்களுடன்ஜீப்பில் சென்ற 6 பேர் கைதுகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் (பொ) செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரோந்து சென்றனர். அப்போது கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே கேரள பதிவெண்ணுடன் வந்த பொலிரோ ஜீப்பை மடக்கி சோதனையிட்டனர். அதில், இரும்பு ராடுகள், கயிறு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதையடுத்து காரில் இருந்த கேரள மாநிலம், பாலக்காடு பொரம்புரா முனாவர், 26, திருச்சூர் மாவட்டம், தப்பேரியா ஜோபி, 47, கனிமங்கலம் சுனில்குமார், 49, குறுக்கன்சேரி செபஸ்டின், 38, சீகேஸ், 47 மற்றும் தைகட்டுச்சேரி கணேஷ், 45, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள், மாடு திருடும் கும்பலா அல்லது வேறேதும் சதி திட்டத்துடன் கிருஷ்ணகிரி வந்தனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.