மோசமான சாலையால் மாணவர்கள் அவதி
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி அருகே உள்ள பசந்தி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கிருந்து சுப்பரமணி நகர் வரை செல்லக்கூடிய 2 கி.மீ., தார்ச்சாலை, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக காணப்படுகிறது. மழை காலங்களில் இச்சாலையை பைக்கில் கடந்து செல்வது சவாலாக உள்ளது. பள்ளி மாணவ, மாணவியர் சைக்கிளில் செல்லும்போது, அடிக்கடி விழுகின்றனர். இவ்வழியே செல்லும் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் எச்சரிக்கையுடன் ஊர்ந்து செல்கிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், நேரில் சென்று கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைத்து தர வேண்டும்.