முருகன் கோவில்களில் சூரசம்ஹாரத்தையொட்டி சுவாமி திருக்கல்யாண உற்சவம்; பக்தர்கள் வழிபாடு
கிருஷ்ணகிரி, சூரசம்ஹார நிகழ்வையொட்டி, மாவட்டத்திலுள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், சூரசம்ஹார நிகழ்வையொட்டி கடந்த, 26ல் அம்மன், முருகனுக்கு வேல் வழங்கும் நிகழ்வும், நேற்று முன்தினம் மாலை, சுப்பிரமணிய சுவாமி சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வும் நடந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு யாகம் வளர்த்து, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் சீர்வரிசைகளுடன் பங்கேற்றனர். இதேபோல், கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரியம் பகுதி-2ல் அமைந்துள்ள, வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமி கோவில் மற்றும் காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில், நேற்று மாலை, சிறப்பு பூஜை மற்றும் யாகத்துடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.* ஓசூர் முல்லை நகர், காயத்ரி அம்பாள் கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவு நாளான நேற்று, வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக, கோவிலில் உள்ள சங்கடஹர விநாயகர் சன்னதியிலிருந்து, கல்யாண சுப்பிரமணியர் சுவாமி சன்னதிக்கு, 100க்கும் மேற்பட்ட பெண்கள், சீர்வரிசை தட்டுகளை எடுத்து கொண்டு, மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர். ஆண் பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்.அதேபோல், ஓசூர் பெரியார் நகர் வேல்முருகன் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத வேல்முருகன் திருக்கல்யாணம் நேற்று காலை நடந்தது. முன்னதாக, வேல்முருகனுக்கு நலங்கு செய்யும் நிகழ்ச்சி மற்றும் பூணுால் அணிவிக்கும் உபநயன வைபவம் நடந்தது. பெண் வீட்டார் சார்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், கணக்கு குழு தலைவர் பார்வதி நாகராஜ் உட்பட பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஓம்சக்தி அம்மன் கோவில், வள்ளி, தெய்வானை சமேத முருகன் திருக்கல்யாண வைபவத்தையொட்டி, மயில் மேல் அம்மன் செல்வது போன்ற அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிருந்தாவன் நகர் வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோவிலில், நேற்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.* தர்மபுரி மாவட்டம், அரூர் மாரியம்மன் கோவில் தெருவிலுள்ள அனுகிரக ஆஞ்சநேயர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் கோவிலில், 12ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா, கடந்த, 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. நேற்று காலை, வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. பின், இரவு சுவாமி திருவீதி உலாவும் நடந்தது.