5 கிராமங்களுக்கு பாதை அடைப்பு பேச்சுவார்த்தையில் தற்காலிக தீர்வு
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாளேதோட்டம் பஞ்.,க்கு உட்பட்ட, போச்சம்பள்ளி சிப்காட் பகுதியை ஒருங்கிணைத்துள்ள, காட்டுமூக்கம்பட்டி, அருந்ததியர் நகர், அம்பேத்கர் நகர், குஞ்சால்கவுண்டர் கொட்டாய் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள், 60 ஆண்டுகளுக்கு மேலாக, தங்கள் பகுதிக்கு செல்ல, மண் சாலையை பயன்படுத்தி வந்தனர்.கடந்த, 3 நாட்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த பட்டா நிலத்தின் உரிமையாளர்கள், அந்த பாதை தங்களுக்கு சொந்தம் என அதில் மண்ணை கொட்டி பாதையை துண்டித்தனர். இதனால் அன்றாட பணிகளுக்கு செல்வோர், போச்சம்பள்ளி சிப்காட் பணிக்கு செல்லும் பெண்கள் மற்றும் தீபாவளி பண்டிகை கொண்டாட பொருட்களை வாங்க செல்வோர் என அனைத்து தரப்பினரும், பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நில உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்கள் இடையே சமாதான பேச்சுவார்த்தை, நேற்று காலை போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தார் அருள், போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி முன்னிலையில் நடந்தது. இதில் பட்டா நிலத்தில், கிராம மக்கள் தற்காலிகமாக சென்று வர முடிவானது. மீண்டும் ஒரு குறிப்பிட்ட தேதியில், சுமுக பேச்சுவார்த்தை நடத்தி, நிரந்தர தீர்வு காணப்படும் என, முடிவு செய்யப்பட்டது.