உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜி.ஹெச்.,ல் பல மணி நேரமாக காரில் இருந்த சடலம் நோயாளிகள் அச்சம்; போலீசார் அலட்சியம்

ஜி.ஹெச்.,ல் பல மணி நேரமாக காரில் இருந்த சடலம் நோயாளிகள் அச்சம்; போலீசார் அலட்சியம்

ஓசூர்: ஓசூர் அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து, நேற்று காலை வரை காரில் விபத்தில் சிக்கியவர் சடலம் இருந்ததால், நோயாளிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு ஐ.டி.ஐ., அருகே உள்ள சிக்கன் கடையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தீப், 38, பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் மதியம் நவதி முத்து மாரியம்மன் கோவில் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட சிக்கன் கடை நிர்வாகத்தினர், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சந்தீப்பிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நல்லாம்பட்டி பகுதிக்கு கட்டு போட காரில் அழைத்து சென்றனர். அவரது உடல்நிலை மோசமான நிலையில், பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்ததால், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு காரில் சடலத்தை கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் போலீசார் கடிதம் கொடுத்தால் மட்டுமே சடலத்தை பிரேத பரிசோதனை அறையில் வைக்க முடியும் என கூறப்பட்டது. ஆனால், வழக்கை விசாரிக்க வேண்டிய ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பணி முடிந்து வீட்டிற்கு சென்று விட்டனர். அதனால் கடிதம் கொடுக்க முடியாமல் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை, 7:00 மணி வரை ஓசூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் காரிலேயே சடலம் அனாதையாக பாதுகாப்பின்றி இருந்தது.இது மற்ற நேயாளிகளை அச்சமடைய செய்தது. இரவு நேரத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் போலீசார் பணியில் இருப்பதில்லை. விபத்து நடந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தால், அதை விபத்து நடந்த எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் சட்டம், ஒழுங்கு ஸ்டேஷன் போலீசார் விசாரிப்பர். விபத்தில் காயமடைந்தாலோ அல்லது சில மணி நேரம் கழித்து உயிரிழந்தாலோ, அந்த வழக்கு ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கு வருகிறது. இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருப்பவர் தான் விபத்து மரண வழக்குகளை விசாரிக்க வேண்டும். ஆனால், ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஸ்டேஷன் எஸ்.ஐ., கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் அந்த ஸ்டேஷன் எஸ்.ஐ., பொறுப்பில் உள்ள அதிகாரி விபத்து வழக்குகளை விசாரிக்கிறார். கடைசியில் விபத்து நடந்த பகுதியில் உள்ள சட்டம், ஒழுங்கு போலீசார் வழக்கை முடிக்கும் பணியை மேற்கொள்கிறார். இது தேவையில்லாமல் தலையை சுற்றி மூக்கை தொடும் வேலையாக உள்ளது. போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரை, காயமடையும் விபத்து வழக்குகளை மட்டும் விசாரிக்குமாறு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டால், மக்களின் இதுபோன்ற குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும்.போக்குவரத்து புலனாய்வு பிரிவு எஸ்.ஐ., காணிக்கைசாமி கூறுகையில், ''இப்போது தான் சடலத்தை கொடுத்துள்ளனர் இரவில் வந்ததால் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முடியுமா. பென்னாகரம், நல்லம்பள்ளி சென்று சுற்றிக்கொண்டு வந்துள்ளனர். ஒடிசாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை